மின்சார கார் உற்பத்தியில் காலடி வைக்கும் பிரபல தொலைப்பேசி நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனம்.
டிசம்பர் இறுதியில் சீனாவில் தனது புதிய தயாரிப்பான மின்சார காரை அறிமுகப்படுத்திய ஜியோமி ஆச்சரியப்பட செய்தது.
இந்த நிலையில் பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் எம்டபிள்யூசி (மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ்) உலக மாநாட்டில் புதிய தயாரிப்பான எஸ்யூ7 செடான் காரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது, ஜியோமி.
அக்வா ப்ளூ எஸ்யூ7 பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் திறன் சார்ந்தும் முக்கிய வரவாக இருக்க போவதாக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர்கார் ஆன மெக்லாரென் 720எஸ் போல இருக்கும் ஜியோமியின் இந்த கார் அதிகபட்சம் 265 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.
ஒருமுறை சார்ஜ் ஏற்றப்பட்டால் 800 கிமீ தொலைவு வரை போகலாம்.
தன்னிச்சையாக இயங்க கூடிய தானியங்கி ஓட்டுநர், பிரத்யேக இயங்குதளம் (ஓஎஸ்) உள்ளிட்டவற்றை ஜியோமி வடிவமைத்துள்ளது.
இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடி வரை இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஜியோமி முதலீடு செய்துள்ளதாகவும் இந்தாண்டு இறுதிக்குள் சீனாவில் கார் விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது.