தெல்லிப்பழை வைத்தியசாலையில் தாதியர்களுக்கு வசதிகள் இல்லை – அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் கடிதம்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆரம்ப வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதியர்களுக்கான வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இங்கு பணிபுரியும் தாதியர்கள் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் மதிவத்த குறிப்பிட்டுள்ளார்.
தாதியர்களின் பிரச்சினை குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு கோரி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது பெருந்தொகையான தாதியர்கள் வடமாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இம்முறை மாத்திரம் சுகாதார சேவைக்காக வடக்கிற்கு 150க்கும் மேற்பட்ட புதிய தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தங்கியிருந்து பணிபுரிவதற்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் தொடர்பில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது.
இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிவித்திருந்த போதும் தமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை என தாதியர்கள் எமது சங்கத்திற்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்களைப் பாதிக்கும் பின்வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தாதியர்களுக்கான விடுதி வசதி, குடிநீர், விடுமுறை, புற்றுநோய் பிரிவில் பணிபுரிபவர்களுக்கான பாதுகாப்பு ஆடை, கருவிகள் மற்றும் தாதியர்களுக்கான இடமாற்றம் போன்றன தொடர்பாக வடமாகாண ஆளுநர் உட்பட அனைத்து அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் கலந்துரையாட நாம் தயாராக உள்ளோம். எனினும் தாதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.