ஆசிய நாடொன்றில் மானிய விலை அரிசிக்காக முண்டியடித்த மக்கள்: உச்சம் தொட்ட விலை உயர்வு
இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெரும்பாலும் பெண்கள் உள்ளிட்ட டசின் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த தகவல் வெளியாகியுள்ளது.
16 சதவிகிதம் அதிகரித்துள்ளது
பெகாசி நகரில் அரசாங்கத்தின் உணவு கொள்முதல் நிறுவனமான புலாக் நடத்தும் தற்காலிக சந்தையிலேயே மக்கள் பெருங்கூட்டமாக திரண்டிருந்துள்ளனர். இந்தோனேசியாவின் 270 மில்லியன் மக்களில் பெரும்பாலோருக்கு அரிசி முக்கிய உணவு தானியமாக உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரிசி விலை 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. பொதுவான அங்காடிகளில் விலை அதிகம் என்பதால் மக்கள் மானிய விலை சந்தைகளை பெரும்பாலும் நாடி வருகின்றனர்.
உள்ளூர் பண மதிப்பில் பொதுவான அங்காடிகளில் ஒரு கிலோ அரிசிக்கு 14,300 rupiah என விற்கப்படும் நிலையில், மானிய விலையில் 10,600 rupiah( இந்திய பண மதிப்பில் ரூ 55.87) என விற்கப்படுகிறது.
ஆனால் ஒரு வாடிக்கையாளருக்கு 10 கிலோ அரிசி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் 300,000 மெட்ரிக் டன் அரிசியை அரசாங்க இருப்புக்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சந்தைகளில் புலாக் அமைப்பு விநியோகித்துள்ளது.
மேலும் 315 சந்தைகளை திறக்க
மட்டுமின்றி, ஜனவரி மாதம் மட்டும் இதுபோன்ற 429 சந்தைகளை அமைத்து மக்களுக்கு அரிசி விநியோகம் முன்னெடுத்துள்ளதாகவும், மேலும் 315 சந்தைகளை திறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் இந்த ஆண்டு, நடவு தாமதம் மற்றும் மழையின்மை காரணமாக அறுவடையை ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
இதனிடையே, வேளாண் அமைச்சகத்தின் தகவல்கள் அடிப்படையில், ஜனவரியில் 1.63 மில்லியன் மெட்ரிக் டன் மற்றும் பிப்ரவரியில் 1.15 மில்லியன் அரிசி வழங்கல் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.