கெஹெலியவை சந்திக்க சிறைக்கு சென்றார் மகிந்த
இலங்கைக்கு தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றதாக செய்திகள் வெளியிடப்பட்டாலும், இதன் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு விடயமும் வெளியிடப்படவில்லை.
இலங்கைக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலை
இதையடுத்து, நோய்வாய்ப்பட்ட காரணத்தால் வைத்தியரின் பரிந்துரைக்கமைய வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல்லவை சந்திப்பதற்காக இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு பயணம் செய்துள்ளார்.
தனது கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலியவின் நலன் விசாரிக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.