உச்சத்தை தொட்ட அரிசியின் விலை… வரிசையில் நிற்கும் மக்கள் எந்த நாட்டில் இந்த அவலம் தெரியுமா…!
ஆசிய நாடான இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெகாசி நகரிலுள்ள அரசாங்கத்தின் உணவு கொள்முதல் நிறுவனமான புலாக் நடத்தும் தற்காலிக சந்தையிலேயே மக்கள் பெருங்கூட்டமாக வந்து மானிய விலை அரிசிக்காக காத்திருக்கின்றனர்.
இந்தோனேசியாவின் பிரதான உணவுப்பொருட்களில் ஒன்றாக விளங்கும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதன் விலை அதிகரித்துள்ளது, இதன் காரணமாக அதிக விலைக்கு அரிசியை கொள்வனவு செய்வதில் சிரமம் நிலவுவதால் மானிய விலையில் அரிசியை கொள்வனவு செய்ய அதிக மக்கள் திரண்டுள்ளனர்.
அதிக விலைக்கு அரிசி
கடந்த ஆண்டுடன் (2023) ஒப்பிடுகையில், அரிசியின் விலை 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், சந்தையில் அதிக விலைக்கு அரிசி விற்கப்படுவதால் மக்கள் மானிய விலை சந்தைகளை பெரும்பாலும் நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மானிய விலை சந்தைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஜனவரி முதல் 300,000 மெட்ரிக் தொன் அரிசியை அரசாங்க இருப்புக்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சந்தைகளின் ஊடாக புலாக் அமைப்பு விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மழையின்மை
அதுமாத்திரமன்றி, ஜனவரி மாதம் மட்டும் இதுபோன்ற 429 சந்தைகளை அமைத்து மக்களுக்கு அரிசி விநியோகம் செய்துள்ளதாகவும், மேலதிகமாக இன்னும் 315 சந்தைகளை திறக்க தீர்மானித்திருப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவில் இந்த ஆண்டு நெல் விதைப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் மழையின்மை போன்ற காரணங்களால் அறுவடையை மேலும் ஒரு மாதம் தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, விவசாய அமைச்சின் தகவல்களின் அடிப்படையில், ஜனவரியில் 1.63 மில்லியன் மெட்ரிக் தொன் மற்றும் பெப்ரவரியில் 1.15 மில்லியன் அரிசி வழங்கல் பற்றாக்குறை நிலவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.