கிளிநொச்சி மாவட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் : மக்கள் நலத்திட்ட பணிகள் ஆரம்பித்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று(29) கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது மக்கள் நலத்திட்ட பணிகள் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்படது.
கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழுந்துப்புலவு – மயில்வாகனபுரம் வீதி புனரமைப்பு பணி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2024ம் ஆண்டு வீதிப்புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் இப் புனரமைக்கப்பணிகள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட புன்னைநீராவியடி விஸ்வமடு சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட 15 கடைத்தொகுதிகளை அமைச்சர் வர்த்தகர்களிடம் கையளித்தார்.
புன்னைநீராவியடி சந்தியில் அமைந்துள்ள பழைய கடைத்தொகுதிகளுக்கு பதிலாக LDSP(BT2 ) திட்டத்தின் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்ட 15 கடை தொகுதிகளை 3000 ரூபா மாத வாடகையின் அடிப்படையில் பிரதேச சபையின் ஒப்பந்த நிகழ்ச்சி திட்டங்களுக்கு அமைவாக இன்றைய தினம் அமைச்சரால் கையளிக்கப்பட்டது.
மேலும் நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் கடற்றொழில் அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
USAID நிறுவனத்தின் 2024 ஆண்டுற்கான சமூக சேவையினை வலுவுட்டுவதற்கான நிதி பங்களிப்போடு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக மீன்குஞ்சுகள் விடப்படுவதுடன், சிறுவர் பூங்கா ஒன்றும் திறந்து வைக்கப்பட்டு மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் கடைத்தொகுதியும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குடமுருட்டி குளத்தின் பாவனை தொடர்பில் இரண்டு அமைப்புகளுக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அமைச்சர் தலைமையில் துறைசார் தரப்பினர்களின் பங்குபற்றலுடன் பூநகரி பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.