ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்கத் தடையில்லை!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீா்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரா் உள்ளிட்ட 7 போ் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க தென் மாவட்டத்துக்கென மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்பு துறை சாா்பில் தேனி மாவட்ட நீதிமன்றத்திலேயே ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்று தேனி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. ஆனால், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மதுரையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்ட நீதிமன்ற உத்தரவு ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து குற்றம்சாட்டபட்ட நபா்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.
சம்மனை எதிா்த்தும் வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரியும் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது.
சிவகங்கை நீதிமன்ற உத்தரவை எதிா்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கிலிருந்து ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த நிலையில், ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிக்கத் தடை கோரிய ஓபிஎஸ் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிக்கிறார் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.