இந்தியாவால் குறிவைக்கப்படும் யாழ்ப்பாண தீவுகள்…கையெழுத்தானது ஒப்பந்தம்!
கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று (03) தீவுகளில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (01) குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விரிவான தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது ,
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பு
“இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முழு நிதியுதவியின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு தீவுகள் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பைப் பெறும்.
530 கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவாட் சூரிய சக்தி, 2400 கிலோவாட் மின்கல சக்தி மற்றும் 2500 கிலோவாட் ஸ்டாண்ட் பை டீசல் பவர் சிஸ்டம் போன்றவை இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம்
மேலும், இந்தத் திட்டம் இந்தியாவின் யூ சோலார் கிளீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் மூன்று தீவுகளிலும் அமைக்கப்படவுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
தவிரவும் இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவிய இந்திய அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.