தரமற்ற மருந்துப்பொருள் இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சு மேலதிக செயலாளரிடம் விசாரணை
தரமற்ற மருந்துப்பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க, விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக வருமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (01.03.2024) காலை அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்கவிடம் 09 மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
விசாரணைகள்
அன்றைய தினம் காலை 10:00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்த அவர், இரவு 7:00 மணி வரை தொடர்ச்சியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அதற்கடுத்த நாளான பெப்ரவரி முதலாம் திகதியும் மருத்துவர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான பின்புலத்தில் அவர் இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இம்யூனோகுளோபுலின் மோசடியில் மூன்று முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக பல தரப்பினரால் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர ஆகியோரும் மோசடியின் பங்காளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுஜன பெரமுணவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சீ.பி.ரத்நாயக்கவின் உடன்பிறந்த சகோதரரே சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க என்றும் கூறப்படுகின்றது.