10 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்: காரணம் என்ன?
பிரபலமான திருமண பொருத்த சேவைகள் வழங்கும் செயலிகள் உள்பட கூகுள் 10 செயலிகளை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
கூகுளின் தளத்திலிருந்து லாபம் ஈட்டும் இந்த நிறுவனங்கள் கூகுளின் கட்டண மாற்ற கொள்கையோடு பொருந்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கூகுள் தெரிவிக்கவில்லை. எனினும் திருமண பொருத்த செயலிகளான சாதி, மேட்ரிமோனி.காம் மற்றும் பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட செயலிகள் தற்போது கிடைக்கவில்லை.
அதே போல வலைத்தொடர் செயலியான பாலாஜி டெலிபிலிம்ஸ் ஆல்ட் (ஆல்ட்பாலாஜி), ஆடியோ தளமான குக்கூ எஃப்எம், டேட்டிங் செயலிகளான குவாக் குவாக், ட்ரூலி, மேட்லி ஆகிய செயலிகளும் ப்ளே ஸ்டோரில் கிடைக்கவில்லை.
இந்திய போட்டி ஆணையம் முந்தைய கட்டண கட்டுபாட்டைத் தளர்த்தி அதிகபட்ச வரம்பினை 15 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்தியது.
செயலிகள் வழியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணமாக கூகுள் பெற்று வந்த 11 சதவிகிதம் என்பது 26 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு சென்ற செயலிகள் தற்கால தடை கோரின. நீதிமன்றம் தடை வழங்க மறுத்தது.
இதன் தொடர்ச்சியாக கூகுள் செயலிகளை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து கூகுள் வெளியிட்ட குறிப்பில், கூகுளில் இருந்து மகத்தான மதிப்பு பெற்ற போதும் கட்டணம் செலுத்த நன்கு அறியப்பட்ட 10 நிறுவனங்கள் மறுத்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.