நாட்டை உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு… அதிர்ச்சி தரும் பின்னணி
பெங்களூருவில் இயங்கிவரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பயங்கரவாதிகளின் சதிச்செயலா? என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு நகரத்தில் பல கிளைகளுடன் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. குண்டனஹள்ளியில் உள்ள இந்த உணவகத்தின் கிளையில், நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் வாடிக்கையாளர்கள் பலர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில், உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் காயம் அடைந்தனர். சமையலுக்கு வைத்திருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் பை ஒன்றை வைத்துவிட்டு செல்வதும், பின்னர் அந்த பை வெடித்துச் சிதறிய காட்சியும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பயங்கரவாதிகளின் சதிச் செயலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், தடயங்களை சேகரித்து, பையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரிக்க தொடங்கினர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக எம்.பி.,தேஜஸ்வி சூர்யா, குண்டுவெடிப்பு நடந்தது தெளிவாக தெரிவதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட பதிவில், குண்டுவெடிப்பு நடந்தது உறுதியாகியுள்ளதாகவும், அதே நேரத்தில் தீவிரம் குறைந்த IED குண்டு வெடித்ததால் பெரிதாக பாதிப்பில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது என தெரிவித்த சித்தராமையா, அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ராமேஸ்வரம் கஃபே பகுதியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், குற்றவாளிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் டி.கே.சிவக்குமார் உறுதியளித்தார்.