காசாவில் வீடுகள் மீதான இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் 17 பேர் பலி; 100 க்கும் மேற்பட்டோர்
மத்திய காசா பகுதியில் உள்ள வீடுகள்மீது இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். கடந்த (07.10. 2023) ஆம் திகதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது.
இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும் இன்னும் காசாவில் போர் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் உயிர் பலிகள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன.
மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைக்கிறது.
இதற்கிடையே காசாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து கத்தார், எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்து வருகின்றனர்.
குண்டு சத்தங்கள் இல்லாத அமைதியான காசாவை, அப்பாவி மக்கள் காண ஆவலோடு இருக்கின்றனர்.
வியாழக்கிழமை உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து அல்-அவ்தா மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், “மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர்களில், 80 சதவீதம் பேர் சுடப்பட்ட நிலையில் இருந்தனர்” என்றார்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய காசா பகுதியின் டெய்ர் எல்-பாலா மற்றும் ஜபாலியா நகரில் உள்ள வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். காசாவில் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 71,533 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேலில் 1,139 பேர் உயிரிழந்தனர்.
காசாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இப்போது பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாகவும், மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ பராமரிப்பு பற்றாக்குறையால் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.