அமெரிக்காவுக்கு எதிராக செங்கடலில் ஆயுதக்கடத்தல்
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பாகிஸ்தான் பிரஜைகள் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து ஆயுதக் கடத்தல்காரர்கள் நான்கு பேருடன் மேலும் 7 பேரும் அண்மையில் அமெரிக்க கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏவுகணை பாகங்கள்
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், செங்கடலில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்க ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படும் குரூஸ் எதிர்ப்பு ஏவுகணை பாகங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் கப்பலின் கேப்டன் என கூறிக்கொண்ட நபர் ஈரானின் சபஹர் துறைமுகத்தில் இருந்து ஏவுகணை பாகங்களை பெற்று சோமாலியாவிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்ததாகவும், சோமாலியாவில் இருந்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.