யாழில் சாந்தனின் உடல் மக்கள் அஞ்சலிக்கு ; இன்று தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டு, சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றையதினத்தினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.
தமிழ் தேசிய துக்க தினம்
இதற்கமைய இன்றைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனிற்கு அனைவரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை இன்று காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.