இந்தியாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எண்ணிக்கை வங்கதேசத்தை விட அதிகம்: ராகுல் குற்றச்சாட்டு
வங்கதேசம் மற்றும் பூடானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ நேற்று(மார்ச்.2) மத்தியப் பிரதேசத்தில் நுழைந்தது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் ராகுலின் நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் உச்சகட்டவேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இரட்டிப்பாக உள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதன் மூலம் சிறு வணிகங்களுக்கு நரேந்திர மோடி முடிவுரை கட்டிவிட்டார். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளான பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) ஆகியவை, நாட்டில் அதிக இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர துறைக்கு பெரிய அடி விழுந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.22 சதவீதமாக இருந்தது, இது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (11.3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (12.9 சதவீதம்) ஆகிய நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை நிலவரத்தை விட அதிகம் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுவதையும் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.