யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது சாந்தனின் இறுதி ஊர்வலம்..!
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி தற்போது யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது.
வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன
இந்தியாவின் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் நேற்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.
அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.