;
Athirady Tamil News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வு!

0

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வு நேற்று 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை பீடத்தின் கேட்போர் கூடத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் நெரிப்படுத்தலின் கீழ் பீடாதிபதி அஷ்ஷெய்ஹ். எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இப் புலமைசார் செயலமர்வில் பெண்களின் திருமண வயதெல்லை, வலியின் தேவைப்பாடு, வலியின் ஒப்புதல், திருணமத்திற்கான பெண்ணின் சம்மதம், காழிகளின் தகைமை, பெண்காழிகளின் நியமனம், திருமணப் பதிவு, தாபரிப்பு மற்றும் பலதார மணம் போன்ற முக்கிய விடயப் பரப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், பீடாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ‘இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு குறித்த முஸ்லிம் சமூகத்தின் கருத்துநிலை’ எனும் ஆய்வின் முடிவுகளும் இவ்வமர்வில் முன்வைக்கப்பட்டன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம் மஸாஹிர், பேராசிரியர் கலாநிதி ஆர்.ஏ. சர்ஜூன், கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ், கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உஸ்தாத் மன்ஸூர், கலாநிதி. ஷாமிலா தாவூத், கலாநிதி ஷிஹான் தாவூத், டாக்டர் வை.எல்.எம்.யூஸூப், எம்.எம்.எம். சாபிர், கலாநிதி எம்.பீ. பௌஸூல், கலாநிதி யூ.எல்.அஸ்லம் ஆகியோருடன் சட்ட அறிஞர்களான கலாநிதி ஏ.எல்.கபூர், எம்.எச்.எம். றுஸ்தி, எம்.ஏ.சீ.எம். உவைஸ், ஏ.சீ.எப். ஹூஸ்னா, அஷ்ஷெய்ஹ் டீ.எம்.எம். அன்ஸார், ஜெ. றாஷி முஹம்மத் போன்றோர் இதில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற முஸ்லிம் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், முஸ்லிம் சமூகத்தலைவர்கள், பெண் ஆர்வாலர்கள், துறைசார் நிபுணர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்ததுடன், இதில் பார்வையாளர்கள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் வழங்கப்பட்டன.

இக்குறித்த நிகழ்வில் வளவாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் ஆவணமாக்கப்பட்டு வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என பீடாதிபதி குறிப்பிட்டார். இவ்விடயப்பரப்புகள் தொடர்பாக மற்றுமொரு அமர்வினை ஒழுங்குசெய்யுமாறு இவ்வமர்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.