;
Athirady Tamil News

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு

0

பாகிஸ்தானின் 33ஆவது பிரதமராக முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று  (03) பதவி ஏற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமரை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் திகதி பல்வேறு கலவர சம்பவங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இம்ரான் கானின் ஆதரவு
வாக்கு எண்ணிக்கையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றிய போதும் முழு ஆதரவு கிடைக்கவில்லை.

அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியும், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றின.

இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கூட்டணி ஆட்சியின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டணி ஆட்சி
கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில் இன்று பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்க உள்ளதுடன் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையான ஐவான்-இ-சதரில் நடைபெறும் விழாவில் புதிய பிரதமர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் கலவர சம்பவங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி முழு பெரும்பான்மையை பெறத்தவறினாலும் மொத்தமுள்ள 265 இடங்களில் 75 இடங்களை பெற்று முஸ்லிம் லீக் – நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.