தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்
இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனைக்குழு ஒன்றின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து, 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவினத் தரவை மேற்கோள்காட்டியே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய, இந்தியாவின் நிகர தனிநபர் நுகர்வானது, 2011 – 2012ஆம் ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு 2.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
சமத்துவமின்மையில் சரிவு
அத்துடன், கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விட 3.1 சதவீதம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமத்துவமின்மையில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையே இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் பிரதான பங்காற்றியுள்ளது என்றும் குறித்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ தரவுகள்
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் தொகையின் விகிதாசாரம், 2011 – 2012ஆம் ஆண்டில் 12.2 சதவீதத்திலிருந்து 2022 – 2023ஆம் ஆண்டில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், சர்வதேச ஒப்பீடுகளில் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.