பெங்களூரு குண்டுவெடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு
பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அடுத்தடுத்து இருமுறை குண்டுகள் வெடித்ததில் 10 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முதல்கட்டமாக உணவகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி பெங்களூரு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த காட்சிகளில் பதிவாகியுள்ள குற்றவாளி, தலையில் வெள்ளை தொப்பி, கருப்பு பேன்ட், முகமூடி, கருப்பு மூக்குக்கண்ணாடி, கருப்பு காலணி ஆகியவற்றை அணிந்திருந்ததை போலீஸாா் தெளிவுபடுத்தியுள்ளனா். குண்டுவெடிப்புக்கு காரணமான அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை மாற்றம் செய்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.