;
Athirady Tamil News

சாந்தனின் இறுதிக்கிரியைகள்

0

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.

உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.

சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்று வருகிறது.

இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெற்று மாலை புகழுடல் தகனம் செய்யப்படும்.

இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.