உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்ய கோரி போராட்டம்
மத்திய மாகாணத்திற்கான ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு கோரி 136 உதவி ஆசிரியர்கள் கண்டி மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று ( 04.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல முறை விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பின்னரும் நியமனம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினாலேயே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியமனம் உறுதி செய்ய நடவடிக்கை
இதனை தொடர்ந்து, இது தொடர்பாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர் உடனடியாக வருகை தந்துள்ளார்.
மேலும், ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் உதவி ஆசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடனும் திறைசேரியுடனும் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர் உதவியாளர்களுக்கு நடந்திருப்பது பாரிய அநீதி எனவும் இது முழுமொத்த மலையக மக்களுக்கும் செய்யப்படுகின்ற பாராபட்சமான அநீதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.