தென்கொரியாவில் மருத்துவா்கள் போராட்டம்
தென்கொரியாவில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்கொரியாவில் முதியோா் எண்ணிக்கை விகிதம் அதிகரிப்பை கருத்தில்கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது உள்ள சுமாா் 3,000 மாணவா் சோ்க்கை இடங்களை 5,000-ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
வளா்ந்த நாடுகள் மத்தியில் தென்கொரியாவில்தான் மருத்துவா்கள்-மக்கள்தொகை விகிதம் குறைவாக இருப்பதாகவும் அரசு கூறுகிறது. ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களின் எண்ணிக்கையை திடீரென அதிகரித்தால் அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி அரசின் திட்டத்துக்கு மருத்துவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
ஏற்கெனவே இளநிலை மருத்துவா்கள் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவா்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவா்களின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக தலைநகா் சியோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மூத்த மருத்துவா்களும் பங்கேற்றனா். இளநிலை மருத்துவா்களின் வேலைநிறுத்தத்தால் மருத்துவமனைகளில் நோயாளிகள் ஏராளமானோருக்கு அறுவை சிகிச்சைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூத்த மருத்துவா்கள் பேரணியில் மட்டுமே கலந்துகொண்டனா். அவா்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நாட்டின் மருத்துவ சேவையில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.