10 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டைக் குழந்தைகளை போரில் பறிகொடுத்த தாய்
பாலஸ்தீன பெண் ஒருவர் திருமணமாகி 10 வருடங்கள் கழித்து போருக்கு மத்தியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை இஸ்ரேல் தாக்குதலில் பறிகொடுத்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளான வெசம் மற்றும் நயீம் அபு அன்சா, ரஃபாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஒரு பெண் மற்றும் ஆணுமாகப் பிறந்த இந்த இரட்டையர்களின் பிஞ்சு உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
பிறந்து சில வாரங்களே ஆன இந்தக் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
ராஃபாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஒரே இரவில் இந்தக் குடும்பம் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
குழந்தைகளின் தாயார், ராணியா அபு அன்சா, ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கின் போது, வெள்ளைத் துணியில் சுற்றிவைக்கப்பட்டிருந்த தனது குழந்தையை, கன்னத்தோடு அணைத்துக்கொண்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அபு அன்சாவின் கணவரும் கொல்லப்பட்டார், துக்கத்தில் இருந்தவர்கள் அவளை ஆறுதல்படுத்தினர்.
இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் கூறினர்.