குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்: அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்
கனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் திரண்டார்கள்.
குளிரில் பல மணி நேரம் காத்திருந்த புகலிடக்கோரிக்கையாளர்
கென்யா நாட்டவரான Delphina Ngigi (46) என்ற பெண், கனடாவில் கால் வைத்து மூன்று நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் 17ஆம் திகதி, Mississauga நகரிலுள்ள புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றை வந்தடைந்துள்ளார், நான்கு குழந்தைகளின் தாயான Delphina.
மதியம் ஒரு மணிக்கு புகலிடக்கோரிக்கை மையத்தை வந்தடைந்த நிலையில், இரவு 8.00 மணி வரை மையத்துக்கு வெளியே குளிரில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு 8.00 மணிக்கு மையத்தின் முகப்பு அறையில் தூங்க அனுமதிக்கப்பட்ட Delphina, மறுநாள் காலை குளிக்கும்போது நிலைகுலைந்து சரிந்துள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Delphina, மாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
Delphinaவின் கணவர் சில மாதங்களுக்கு முன் புற்றுநோயால் மரணமடைந்ததால், ஏற்கனவே அவரது குடும்பம் துக்கத்திலிருக்க, Delphinaவின் மரணம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவத் துவங்கியதால், தம்பதியரின் நான்கு பிள்ளைகளிடம் அவரது மரணம் குறித்து அவசரமாக தெரிவிக்கும் ஒரு நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் Delphinaவின் சகோதரியான Faith Wairimu.
அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்
இந்நிலையில், North Yorkஇல் உள்ள தேவாலயம் ஒன்றில் சனிக்கிழமை Delphinaக்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டுள்ளார்கள்.
Delphina யார் என்றே தெரியாத நிலையில் அவருக்காக மக்கள் அஞ்சலி செலுத்தத் திரண்டதை அறிந்த Delphinaவின் சகோதரியான Faith Wairimu, இது மனிதநேயத்தின் மறுபுறத்தைக் காட்டுகிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இப்படி ஒரு அன்பைப் பெற்றதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று கூறும் Faith Wairimu, நாம் எங்கிருந்தாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும், ஏனென்றால், நமக்கு எப்போது மற்றவர்களின் உதவி தேவைப்படும் என்பது நமக்குத் தெரியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்.