பெரும் சொத்து… பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த பிரித்தானியர்
பிரித்தானியர் ஒருவர் தமது 500,000 பவுண்டுகள் சொத்தில், தனது பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளது.
91வது வயதில் மரணம்
பாதிக்கப்பட்ட ஐவரும் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ல் Frederick Ward Snr என்பவர் தமது 91வது வயதில் மரணமடைந்துள்ளார்.
அவர் தமது மொத்த சொத்தையும் தனது இரு பிள்ளைகளான Terry Ward மற்றும் Susan Wiltshire ஆகியோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். ஆனால் அவரது மரணமடைந்த ஒரு மகனின் ஐந்து பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளார்.
இந்த விவகாரம் குடும்ப கலகத்திற்கு வழிவகுத்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரான Frederick Ward Snr தெரிவிக்கையில், தாம் மூன்று முறை மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது தமது மகனின் ஐந்து பிள்ளைகளும் தம்மை ஒருமுறை கூட வந்து நலம் விசாரிக்கவில்லை என்றும், அது தம்மை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தங்களின் தாத்தாவின் சொத்தில் பங்கில்லை என்பதை அறிந்துகொண்ட ஐந்து சகோதரிகளும், நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதில், தங்கள் தாத்தாவின் சொத்தில் மறைந்த தந்தைக்கு கிடைக்க வேண்டிய மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுத் தர வேண்டும் என முறையிட்டுள்ளனர்.
தலா 50 பவுண்டுகள் மட்டுமே
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரப்பிள்ளைகளின் செயலால் ஏமாற்றமடைந்த தாத்தா எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்படுவதைத் தவிர வழியில்லை என குறிப்பிட்டு, புகாரை தள்ளுபடி செய்துள்ளது.
லண்டனின் தெற்கு ஈலிங் பகுதியில் குடியிருந்து வந்த Fred Snr என்பவருக்கு Fred Jr, Terry மற்றும் Susan என மூன்று பிள்ளைகள். Fred Snr தனது மொத்த சொத்துக்களையும் மூன்று பிள்ளைகளுக்கும் என பிரித்து முன்னர் உயில் எழுதியுள்ளார்.
ஆனால் 2015ல் Fred Jr மரணமடைய, அவரது குடும்பத்தை அதன் பின்னர் அவர் அதிகமாக சந்திக்கவும் இல்லை. இந்த நிலையில் 2020ல் Fred Snr மரணமடைய, அதன் பின்னர் தான் Fred Jr என்பவரின் ஐந்து மகள்களுக்கும் தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.