சாந்தனை இழந்து விட்டோம் ; எஞ்சிய மூவரையும் காப்பாற்றுங்கள் – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை
சாந்தனை இழந்து விட்டோம். எஞ்சியுள்ள மூவரையும் உயிருடன் மீட்பதற்கு இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி கோரியுள்ளார்.
சாந்தனின் இறுதி கிரியையின் போது அஞ்சலி உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
சாந்தனை எப்படியாவது காப்பாற்றி உயிருடன் அவரது தாயிடம் ஒப்படைத்து விடுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. அதற்காகவே கடுமையாக போராடினோம். எமது போராட்டங்கள் அனைத்தும் வீணாகி போனது.
இந்நிலையில் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன். நீங்கள் அனைவரும் , தமிழ் நாட்டிற்கு வந்து திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரையும் சந்தித்து , அவர்களின் நிலைகளை நேரில் பாருங்கள்.
தமிழக முதலமைச்சரை சந்தித்து அவர்களின் நிலைமைகள் தொடர்பில் எடுத்து கூறுங்கள். அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அவர்களை அனுப்பி , அங்கு அவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதியுங்கள் என கோருங்கள்.
உடனடியாக அவர்களை , அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலைமைகள் காணப்பட்டால் , தமிழகத்தில் அவர்களின் உறவினர்கள் நண்பர்களுடன் செல்ல அனுமதிக்குமாறு கோருங்கள்.
சிறப்பு முகாமில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே அவர்களையும் உயிருடன் மீட்க முடியும். தமிழகம் சென்றதும் , அவர்கள் மூவரையும் விடுவிக்கும் சட்ட போராட்டத்தில் முழு வீச்சோடு நான் செயற்படுவேன் என மேலும் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்டவர்களுக்கு ஆதரவாக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணி புகழேந்தி வாதாடி வருகின்றார் என்பதும் , அதற்காக எந்த விதமான சேவை கட்டணத்தையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.