மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டி? வெளியான பரபரப்பு தகவல்!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் போட்டி
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது.
புதுச்சேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபலமான நபரை தேர்ந்தெடுக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி யோசனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேர்வில் தீவிரம் காட்டிய பாஜக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
வெளியான தகவல்
இந்நிலையில், புதுவையில் உள்ள சுகன்யா கன்வன்சன் சென்டரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதியில் பாஜக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது. நிர்மலா சீதா ராமன் வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் புதுவை மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.