சாந்தனை இழந்துவிட்டோம்; மீதியுள்ள 3 பேரையுமாவது காப்பாற்றுங்கள்!
உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். இந்நிலையில் எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சாந்தனின் இறுதி அஞ்சலி
உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சாந்தனை எப்படியாவது காப்பாற்றித் தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார்.
அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் இருந்தும் அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார்.
இந்த வேளையில் ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வர வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பாருங்கள்.
தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட் டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள்.
அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும் என்றார். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதற்கான சட்டப்போரட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி கூறினார்.
அதேவேளை சட்டத்தரணி புகழேந்தி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ் விதக் கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.