உலகின் பணக்காரர் பட்டியலில் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் 9 மாதங்களுக்கு மேலாக உலகின் முதல் பணக்காரர் இடத்தை தக்க வைத்திருந்தார்.
ஆனால் அமேசான் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் (60) தற்போது எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு பணக்காரர்களின் தரவரிசையில் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும்.
நேற்று (04.03.2024) டெஸ்லா INC பங்குகள் 7.2% சரிந்ததையடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் தனது முதல் இடத்தை இழந்தார். எலான் மஸ்க் இப்போது 197.7 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.
அதேபோல ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் டாலர்கள் ஆகும். அமேசான் மற்றும் டெஸ்லா பங்குகள் எதிரெதிர் திசையில் நகர்வதால், மஸ்க் மற்றும் பெசோஸ் இடையேயான சொத்து மதிப்பின் இடைவெளி, ஒரு கட்டத்தில் $142 பில்லியன் அளவுக்கு இருந்தது.
அமேசான் பங்குகள் 2022 இன் பிற்பகுதியில் இருந்து தற்போது இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில் டெஸ்லா பங்குகள் அதன் 2021 உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 50% சரிவை சந்தித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய்களின் ஆரம்பத்தில் இருந்தே சிறந்த ஆன்லைன் விற்பனை தளமாக அமேசான் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2017-ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் நிகர மதிப்பை முறியடித்ததன் மூலம் பெசோஸ் முதன்முதலில் உலகின் பணக்காரர் ஆனார்.
அதேபோல் 2021-ம் ஆண்டு டெஸ்லா பங்குகள் படிப்படியாக சரிவைக் கண்டபோது, அமேசான் பங்குகள் உயர்ந்து, அவர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார்.