இந்தியா – கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும் – முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
கர்நாடகா – பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில் மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவில் உள்ள பேருந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் குண்டு வெடிக்கும் என கர்நாடக முதல் மந்திரி, பெங்களூரு பொலிஸ் கமிஷனர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த மின்னஞ்சலில், “வருகிற சனிக்கிழமை மதியம் 2.48 மணிக்கு பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள் மற்றும் பேருந்துகள், தொடருந்துகளில் வெடிகுண்டு வெடிக்கும்.
குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும்” என்று கூறப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சோதனை
இந்நிலையில் சென்னையில் மண்ணடி பகுதியில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மண்ணடி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் ஒரு வீட்டில் தற்பொழுது சோதனையானது நடைபெற்று வருகிறது.
அதேபோல தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்ய உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.