இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவது எப்போது? முதன்முறையாக வெளியான அறிவிப்பு
பிரித்தானிய இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம், பிரித்தானியாவில் அளவுக்கு மீறி கவனம் ஈர்த்துவிட்டது எனலாம்.
பரவத் துவங்கிய வதந்திகள்
ஜனவரி மாதம், இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வுக்காக வீடு திரும்பியதைத் தொடர்ந்து, அவரைக் குறித்து பெரிய அளவில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஆகவே, இளவரசிக்கு என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஆர்வம், வதந்திகள் பரவக் காரணமாக அமைந்துவிட்டது.
இளவரசி கேட் கோமாவில் இருக்கிறார், இளவரசியும் இளவரசர் வில்லியமும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவத் துவங்கின. ஏற்கனவே மன்னர் உடல் நலம் பாதிக்கபட்டதால் அதிக வேலைப்பளுவைச் சுமந்துகொண்டிருக்கும் இளவரசர் வில்லியமுக்கு இந்த செய்திகள் கூடுதல் பாரமாக அமைந்தன.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தி
இந்நிலையில், இளவரசி கேட் பணிக்குத் திரும்புவது குறித்து முதன்முறையாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெற உள்ள Trooping of the Colour என்னும் நிகழ்ச்சிக்காக, குதிரை வீரர்கள் பங்கேற்கும் உடை ஒத்திகை நிகழ்ச்சியை இளவரசி கேட் பார்வையிட உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இளவரசி கேட் நன்றாக இருக்கிறார், அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மட்டுமே அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்த நிலையில், முதன்முறையாக, இளவரசி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி தொடர்பில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், இப்போதும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதேயொழிய, கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் இதுவரை அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.