மீண்டும் திறக்கப்படவுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, தற்போது மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை திட்டமிட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, லங்கா சுகர் கம்பனியின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாரதா சமரகோன், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட பல உயர் அதிகாரிகள் கடந்த (04) ஆம் திகதி கண்காணிப்புச் சுற்றுலாவில் ஈடுபட்டது.
மூடப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலை மற்றும் ஏனைய சொத்துக்களை இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். தொழிற்சாலையின் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான திட்டம் ஒன்றை தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்குமாறு இலங்கை சீனி நிறுவன அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள்
கந்தளாய் சீனி நிறுவனத்தில் 20,150 ஏக்கர் நிலப்பரப்பில் பதினைந்தாயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் குழுவாக பணியாற்றி வருகின்றனர்.
தற்போது பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட சுமார் 35 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
செக்கோஸ்லோவாக்கிய அரசாங்கத்தின் உதவியுடன்
1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி, செக்கோஸ்லோவாக்கிய அரசாங்கத்தின் உதவியுடன், அப்போது பிரதமராக பதவி வகித்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவால் இந்த சீனி தொழிற்சாலை திறக்கப்பட்டது.