ஹட்டன் – சிங்கமலை வனப்பாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு: நீர் பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – டிக்கோயா நபரசபை பிரதேசத்திற்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கும் பிரதான நீர் பாசன பிரதேசமான சிங்கமலை வனப்பாதுகாப்பு பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(05.03.2024) மாலை இடம்பெற்றள்ளது.
இதன்போது ஏற்பட்ட தீப்பரவலினால் பல ஏக்கர் பாதுகாப்பு வனப்பகுதி தீனால் எரிந்து நாசமாகியுள்ளன.
பாரிய நீர் பற்றாக்குறை
ஹட்டன் நகரம், வில்பர்டவுன், பண்டாரநாயக்க டவுன்,பொன்நகர், காமினிபுர, எம்ஆர் டவுன் டிக்கோயா, உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு குறித்த காட்டுப்பகுதியிலிருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் தீக்கிரையாகி எமது நாட்டுக்கே உரித்தான பல அறிய வகை தாவரங்கள் மருந்து வகைகள் உயிரினங்கள் ஆகியன அழிந்து போய் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய மலை நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காட்டுப்பகுதிகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பல ஏக்கர் காட்டு வளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், காட்டு வளம் அழிக்கப்படுவதனால் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் பாரிய நீர் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாத நபர்களினால் வைக்கப்பட்ட தீ காரணமாக பொன்நகர் பகுதிக்கு பாம்பு பன்றி போன்ற காட்டு விலங்குகள் வருகை தருவதாகவும் ஹட்டன் – பொன்நகர் மக்கள் கூறியள்ளனர்.
வறட்சி காரணமாக ஹட்டன் பகுதியில் இரண்டு நாளைக்கு ஒரு தடைவையே குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படும் நிலையில் நீர் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் பாரிய நீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை காணப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே இந்த காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.