யாழில் காலாவதியான மென்பானங்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு தண்டம்
யாழ். சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரம் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த நடவடிக்கையில் , உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஆகியவற்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த காலாவதியான சோடா மற்றும் காலாவதியான பானங்கள் என்பன மீட்கப்படிருந்தன.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
அதனை அடுத்து குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது மன்றில் முன்னிலையான வர்த்தகர்கள் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , காலாவதியான பானத்தை வைத்திருந்த உணவகத்திற்கு 20000 ஆயிரம் ரூபாவையும், காலாவதியான சோடா வைத்திருந்த வர்த்தக நிலையத்திற்கு 8000 ரூபாவையும் தண்டமாக விதித்ததுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழித்துவிடவும் கட்டளையிடப்பட்டுள்ளது.