கலாசாலையில் மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த மகளிர் தினச் சிறப்பு நிகழ்வுகள் 06.03.2024 புதன் காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவியும் யாழ்ப்பாணக் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமாகிய நளினி அகிலதாஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வுகளை கணித நெறி ஆசிரிய மாணவர் செல்வரட்ணம் சந்திரகுமார் நெறிப்படுத்தினார். ஆசிரிய மாணவர் உரையினை ஆங்கில நெறி ஆசிரிய மாணவி தினேஸ் கௌசியாவும் விரிவுரையாளர் உரையினை முத்துக்குமாரு ஜெயக்குமாரியும் ஆற்றினர். பிரதம விருந்தினருக்கான அறிமுகவுரையை விரிவுரையாளர் ரஜிதா சின்னத்துரை மேற்கொண்டார்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை பெண்கல்விக்கு வழங்கிய பங்களிப்புப் பற்றி கலாசாலை அதிபர் ச.லலீசன் எடுத்துக்கூறி நிறைவுரையாற்றினார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட திருமதி நளினி அகிலதாஸ் கலாசாலைச் சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் மதிப்பளிக்கப்பட்டார். திருமதி நளினி அகிலதாஸ் 07.03.2024 வியாழக்கிழமை அரசபணியில் இருந்து இளைப்பாறுகை பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.