தில்லி நோக்கிப் பேரணி: விவசாயிகளின் போராட்டத்தால் காவல்துறை குவிப்பு
குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி, தில்லிக்கு பேரணியாகச் செல்லும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக பஞ்சாப் – ஹரியானா எல்லையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சமியுக்தா விவசாயிகள் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகளின் கீழ், இன்று தில்லி நோக்கி செல்வோம் பேரணியைத் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டது.
பஞ்சாப், ஹரியானா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து ஷாம்பு மற்றும் கன்னௌரி பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதர விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டுள்ளனர்.
இதனால், பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகள், அங்கேயே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை நடத்தினர்.
‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம் மற்றும் இந்திய பருத்தி கழகத்தின் மூலம் பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ளோம் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கொள்முதல் அளவுக்கு வரம்பு நிா்ணயிக்கவில்லை. இதற்கான வலைதளம் விரைவில் உருவாக்கப்படும். தோ்தல் முடிந்து, புதிய அரசு அமைந்த பிறகு மற்ற பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும்’ என்றாா்.
ஆனால், ‘மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து நடத்திய விவாதத்தின் முடிவில், அவை விவசாயிகள் நலன் சாா்ந்து அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே, இந்த முன்மொழிவுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று விவசாய அமைப்புகளின் தலைவர்கள் அறிவித்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தில்லி நோக்கிப் பேரணியில் வன்முறை ஏற்பட்டு, ஒரு விவசாயி பலியான நிலையில், போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியிருக்கிறது.