பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு.. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்பட 6 மாநிலங்களில் உள்ள 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ராமநாதபுரத்தில் முஸ்தாக் அகமது, முமித் மற்றும் சென்னையில் ஹசன் அல் பசாம் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் 25 மொபைல் போன்கள், 6 லேப்டாப்கள், ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக என் ஐ ஏ தெரிவித்துள்ளது.
லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதற்காக இந்த சோதனை நடைபெற்றதாக என் ஐ ஏ விளக்கமளித்துள்ளது. ஆனால், இந்த சோதனைக்கும் பெங்களூரு ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.