யாழில் பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நபர்களே பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீதி கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் வீதியால் வந்த டிப்பர் வாகனத்தை வழி மறித்துள்ளனர்.
அதன் போது வாகனத்தை நிறுத்தாது சாரதி டிப்பர் வாகனத்துடன் தப்பி சென்ற வேளை , பொலிஸார் வாகனத்தை துரத்தி சென்று சாவகச்சேரி நகர் பகுதியில் வழிமறித்துள்ளனர்.
அவ்வேளை டிப்பர் சாரதியும் , டிப்பர் சாரதிக்கு வழிகாட்டியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர்களுமாக சேர்ந்து பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்த வேளை ஒருவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனத்தினையும் , மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.