சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி
சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், மத்திய வங்கியின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தில் சுயாதீன தீர்மானமாக சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்த போதிலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய குறித்த விடயத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்ற காரணத்தினால் இவ்விடயம் சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.