வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (05.03.2024) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட கடித்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தாங்கள் பொறுப்பேற்றதன் பின்னர் நிறைய மாற்றங்களை நாம் காண்கின்றோம்.
பாதிக்கப்படும் மாணவர் கல்வி
அரசியல் ரீதியாகவும் வேறும் பல இடர்ப்பாடுகளாலும் வடமாகாணத்தின் கல்வியில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டதனை, அதனூடான வடபுலத்துக் கல்வியை சிலர் சீரழிக்க முனைந்ததைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
இப்பொழுதும் அந்த தீய சக்திகள் முனைவதனை நாம் அவதானிக்கும் அதேவேளை, அதற்கு உயர் அதிகாரிகள் குறுகிய நோக்கத்தோடு தொழிற்படுவதனை ஏற்க முடியாது.
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் என்பது இன்னும் ஆசிரியர்களை உளரீதியாக வதைத்து அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைத் தடுத்து அதன்மூலம் மாணவர் கல்வியை அழிக்க நாம் இடமளிக்க முடியாது.
உரிய நடவடிக்கை
2024ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளின்பால் இடமாற்றம் வழங்கப்படுவது சட்டரீதியானது. அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரியர்களுக்காக மட்டுமன்றி விசேடமாக மாணவர்களின் நலனுக்காகவே. இதனை இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் தொடக்க காலத்தில் இருந்து மனதில் இருத்தித் தொழிற்படுவதனை தாங்கள் அறியாதவரல்ல.
ஆசிரியர்களை நோகடித்து அவர்களிடம் சேவையைப் பெறுவது அடிமுட்டாள்தனமானது. ஆசிரியத் தொழில் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்துத் தொழிற்படவேண்டியது.
எனவே, தாமதமின்றி இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றுள்ளது.