இறுதி ஊர்வலம்; சிறுமியின் உடல் அருகே புத்தகம், பொம்மைகள் – வழிநெடுக ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி!
9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கொடூர கொலை
புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல், தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.
ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அதன்பின் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்பின், போலீஸார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடினர்.
அப்போது, அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் அதில் காணாமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளார். உடனே, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இறுதி ஊர்வலம்
தொடர்ந்து, இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனியாக வசிக்கும் விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
காலை 11 மணிக்கு சிறுமியை அழைத்துச் சென்றவர்கள், அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் சிறுமி உயிரிழந்ததை அடுத்து கை, கால்களை கட்டி சாக்கு பையில் போட்டு கால்வாயில் வீசியுள்ளது தெரியவந்தது. அதன்பின், வெடித்த போராட்டத்தில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி பெற்றோருக்கு 20 லட்சம் நிவாரணமும், குற்றவாளிக்கு தக்க தண்டனையும் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.
மக்கள் கண்ணீர் அஞ்சலி
தற்போது, சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் சிறுமியின் வீட்டில் இருந்து பாப்பம்மாள் கோவில் சுடுகாடு வரை நடைபெறுகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். சிறுமியின் உடலுக்கு அருகே புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.