பிரதமர் ரிஷியின் மனைவி மீது விமர்சனம் உருவாகக் காரணமான சலுகை நீக்கம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
செல்வந்தர்கள் பலர் வரிச்சலுகைகள் பெற உதவியாக இருந்த விதி ஒன்று நீக்கப்படுவதாக பிரித்தானிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரிஷியின் மனைவி எதிர்கொண்ட விமர்சனம்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்த ஒரு விடயம். அக்ஷதா, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.93 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். அந்த பங்குகளால் அவருக்கு ஆண்டுக்கு சுமார் 11.5 மில்லியன் பவுண்டுகள் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், அக்ஷதா, அந்த வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை. அவர் அவ்வகையில் பெற்ற சுமார் 54.5 மில்லியன் பவுண்டுகள் வருவாய்க்கு வரி செலுத்தியிருந்தால், பிரித்தானியாவுக்கு சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் வரி வகையில் வருவாய் கிடைத்திருக்கும்.
அவர் வரி செலுத்தாததற்குக் காரணம் என்னவென்றால், அக்ஷதாவுக்கு, பிரித்தானியாவில் ‘non-dom’ status’ அல்லது ’non-domiciled tax status’ என்ற நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த non-dom’ status என்பது என்னவென்றால், ஒருவர் பிரித்தானியாவில் வாழ்ந்தாலும், அவரது சொந்த நாடு வேறொன்றாக இருந்தால், வெளிநாடுகளிலிருந்து தனக்கு கிடைக்கும் வருவாய்க்கு அவர் பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை.
பிரித்தானியாவில் வாழும் செல்வந்தர்கள் பலர், இந்த non-dom’ status என்ற நிலையைப் பயன்படுத்தி பெருந்தொகை வரி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், தான் இந்தியக் குடிமகள் என தெரிவித்துள்ள அக்ஷதாவுக்கு non-dom’ status கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வந்த வருவாய்ப்பு பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை.
இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனக்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கு, இனி பிரித்தானியாவில் வரி செலுத்த இருப்பதாக பின்னர் அக்ஷதா அறிவித்தார்.
Non-Domiciled Tax Status சலுகை நீக்கம்
இந்நிலையில், நேற்று, 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரித்தானிய நிதி அமைச்சரான ஜெரமி ஹண்ட் தாக்கல் செய்தார். அதில், பிரித்தானியாவில் Non-domiciled tax status நிலை நீக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து Non-domiciled tax status நிலை நீக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் விதியின்படி, பிரித்தானியாவில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்கள், நான்காவது வரி ஆண்டிலிருந்து முழு வரி செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.
இந்த புதிய விதியால், 2028-29ஆம் ஆண்டிலிருந்து, பிரித்தானியாவுக்கு 2.7 பில்லியன் பவுண்டுகள் வருவாய் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.