இலங்கையில் கல்விச் சீர்திருத்தம்: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், 2024/2025 ம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் ஆதரவை வழங்கும் என்பதைக் கூற வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது.
எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம்.
கல்வி முறையில் மாற்றம்
பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம். பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.
அத்துடன், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம். இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.