வெடுக்குநாறி மலையில் விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் , பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்றது.
இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்திற்குள் குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குடி நீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து குடிநீர் இன்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்ற போதும் அதனையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் குடி நீர் இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாக்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்திற்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தல் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை மூன்று மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கியுள்ளனர்.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை ஆறு மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.