வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி – காங்கிரஸ் முதல்கட்ட பட்டியல் வெளியீடு!
39 தொகுதிகளில் கேரளாவில் மட்டும் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதேவேளையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையில் “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக 195 பேர் அடங்கிய முதல்கட்ட பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் 39 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவித்தார். இதன் மூலம் வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி களம் காணுவாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி, கடந்த முறையைப் போலவே இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவாரா? அது உத்தரபிரதேசத்தின் அமேதியாக இருக்குமா? என்ற விவரங்கள் காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலில் தெரியவரும்.
39 தொகுதிகளில் கேரளாவில் 16 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 7, சத்தீஷ்கரில் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று, தெலங்கானாவில் 4 தொகுதிகளுக்கும், மேகாலயாவில் 2, நாகாலாந்து சிக்கிம், லட்சத்தீவு, திரிபுராவில் தலா ஒரு இடங்களுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கேரளாவில் ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.
தெலங்கானாவில் நலகொண்டாவில் ரகுவீர் ரெட்டியும், ஜாஹிரபாத்தில் முன்னாள் எம்.பி., சுரேஷ் குமாரும் களம் காணுகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 39 வேட்பாளர்களில் 15 பேர் பொதுப் பிரிவையும், 24 பேர் பட்டியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தையும் சார்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வருகின்ற 11 ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. அதில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.