சூழ்ச்சிகளாலேயே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீழ்த்தப்பட்டது: நாமல் ராஜபக்ச
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் 07 இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்திய நிலையில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பற்கு அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னுரிமை வழங்கினார்.
மேலும் பூகோள பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல, வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டது.
சர்வதேச சூழ்ச்சி
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் விரக்தி நிலையை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினால் தான் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதுடன் அரகலயவின் பின்னணி என்ன என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
அதேவேளை, எதிர்வரும் தேசிய தேர்தல்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்” என நாமல் தெரிவித்துள்ளார்.