இலங்கை தமிழர்கள் தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள விடயம்
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை குற்றமற்றதாக்குமாறு இலங்கை அரசை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்கள் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழ் அமைப்புகளுடன் இணைந்து உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வதேச அறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுயநிர்ணய உரிமை
தமிழ் சமூகத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையிலும் நடந்த குற்றங்களுக்கு நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான கோரிக்கையில் அந்நாட்டின் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டொனாக் தமிழ் சமூகத்திற்கு தனது தொடர்ச்சியான ஆதரவை இதன்போது வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தமே குற்றமாக்குகிறது. அத்துடன் ஆறாவது திருத்தமே இலங்கையில் அல்லது வெளிநாட்டில், இலங்கையின் பிரதேசத்தில் தனிநாடு அமைப்பதற்கான ஆதரவை குற்றமாக்குகிறது. ஆகவே, ஆறாவது திருத்தத்தை இரத்து செய்வது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள்
இதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தமது ஆதரவை வழங்கவேண்டும் என்றும் டேம் சியோபைன் வலியுறுத்தினார். இந்தநிலையில் 13வது திருத்தம் மாகாண சபைகளின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அதிகாரங்களை நிறுத்தி அவற்றை இலங்கை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள தெரிவு செய்யப்படாத ஆளுநர்களுக்கு வழங்குகின்றது.
பழங்காலத் தமிழ் வழிபாட்டுத் தலங்களை அரசு கைப்பற்றி சிங்கள பௌத்த விகாரைகளாக மாற்றும் போது தமிழர்கள் பலமற்றவர்களாகி விடுகிறார்கள் என்றும் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டொனாக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தீர்ப்பதில் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து வெளியுறவு செயலாளரும் முன்னாள் பிரதமருமான டேவிட் கேமரூன் தவறியமை குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையில் ஒரு வணிக துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சீன அரசு நிறுவனத்துடன் கேமரூனின் உறவுகளை டேம் சியோபைன் விமர்சித்துள்ளார்.