மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்.., என்ன நடந்தது?
தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி
தமிழக மாவட்டமான சிவகங்கை தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் வன்னிமுத்து மற்றும் முத்தம்மாள். இந்த தம்பதியினருக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில், தந்தை வன்னிமுத்து மரம் வெட்டும் வேலை செய்து வருகிறார். தாய் முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். மேலும், பெண் குழந்தைகள் மூன்று பேரும் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், மரவள்ளிக்கிழங்கு அறுவடை வேலைக்கு சென்ற முத்தம்மாள் வீட்டிற்கு வரும் பொழுது சிறிதளவு மரவள்ளிக்கிழங்கு கொண்டு வந்துள்ளார்.
அந்த கிழங்கை சிப்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த குழந்தைகள் பச்சையாகவும் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுமி உயிரிழப்பு
பின்னர், மூன்று குழந்தைகளும் உறங்க சென்ற நிலையில் இரவு ஒரு மணியளவில் இரண்டு குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
அதில் ஸ்வேதா என்ற சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார். பின்னர், வனிதா மற்றும் சுவாதியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொலிஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.