;
Athirady Tamil News

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

0

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூசையின் போது காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டமானது, நாளை(11) மாலை 4 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மகா சிவராத்திரி பூசையின் போது காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி கவனயீர்ப்பிற்கு ஒருங்கிணைந்த கட்டமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கின்றோம் நேற்று வெடுக்குநாறி மலை இலிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

காவல்துறை அராஜகம்
சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

அதன் உச்ச கட்டமாக தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பூசை மற்றும் படையல் பொருட்கள் காலணி அணிந்த கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டுள்ளது, பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை மீள கைது செய்யப்படுள்ளார்.

அணிதிரண்டு எதிர்ப்பு
இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகிற்கும் அரச உயர் பீடத்திற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும்.

உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் இந்த சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற மோசமான சம்பங்களை கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.